உங்கள் தலையெழுத்தையே மாற்றும்
பிரம்மபுரீஸ்வரர்
படைப்புத்
தொழிலைச் செய்து வந்த பிரம்மனுக்கு முற்காலத்தில் ஐந்து தலைகள் இருந்ததாகவும், மும்மூர்திகளில் ஒருவராக அவர் கருதப்பட்டதாலும் பிரம்மனுக்கு சிறிது கர்வம் ஏற்பட்டது. பிரம்மனின் இந்த
கர்வத்தை
போக்க நினைத்த சிவபெருமான் ஒரு சந்தர்ப்பத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி
எடுத்து விட்டதுடன் ”படைக்கும் தொழிலையும் இழக்கக்
கடவாய் ”என்று சபித்து விட்டாராம். அதிர்ச்சி அடைந்த
பிரம்மன் தனது தவறை உணர்ந்து சாப விமோசனத்திற்கான உபாயம் என்னவென்று சிவனிடம்
பணிவுடன் கேட்டபோது தேச சஞ்சாரம் ஆங்காங்கே சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து
வழிபட்டு வருவாயாக, தகுந்த நேரமும், இடமும் வரும்போது நாமே உமக்கு சாப விமோசனம் தருவோம் என்று கூறினாராம்.
இதனையடுத்து
பிரம்மன் நாடெங்கும் சுற்றி திரிந்து
ஆங்காங்கே சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.இவ்வாறு தேச சஞ்சாரம்
செய்து வந்த பிரம்மன் திருப்பிடவூர் என்ற இந்த திருப்பட்டூருக்கு வந்து குறுகிய
தொலைவு இடைவெளிகளில் 12 சிவலிங்கங்களை செய்து வழிபட்டார். இவரது இந்த வழிபாட்டில்
மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மன் முன் தோன்றி அவருக்கு சாப விமோசனம் கொடுத்து
அவருக்கு மீண்டும் படைக்கும் தொழிலை தொடங்க அனுமதி வழங்கினாராம்.
இவ்வாறு
பிரம்மனால் வழிபடப்பட்டு சாப விமோசனம் பெற்றதால் இங்குள்ள ஈசன் பிரம்மபுரீஸ்வரர்
என்று பெயர் பெற்றார். பிரம்மனின் பொலிவை மீண்டும் வழங்கியதால் இங்குள்ள அம்மன் பிரம்மசம்பத்
கவுரி எனும் சிறப்பு பெயருடன் விளங்குகிறாள். சாப விமோசனம் பெற்ற பிரம்மன் பலவாறாக
சிவனை துதித்து வணங்கினான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், இனி படைக்கும் தொழிலை செய்வதோடு, உன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்கு
அவர்களின் தகுதி மற்றும் தேவைக்கேற்ப தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்றும் அருள்
செய்தாராம்.
இந்த
நம்பிக்கையினால் நல்ல நிலையில் இருந்து விதிவசத்தால் அந்த வசதி வாய்ப்பை இழந்து
தவிக்கும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து பிரம்மனை பூஜித்து, தங்களின் தலையெழுத்தையே மாற்றிக்
கொள்ளும் நிறைவுடன் செல்கின்றனர். இங்கு வந்து சென்ற பின் அவர்களின் வாழ்வில்
இழந்தவற்றை மீண்டும் பெற்று மகிழ்வதாக அவர்கள் மற்றவர்களிடம் கூறியதிலிருந்து
இக்கோவில் பிரம்மனையும் ,ஈஸ்வரனையும், அம்மனையும் வழிபட தற்போது திரளான பக்தர்கள் உலகின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் இக்கோவிலுக்கு வரத்துவங்கியுள்ளனர். நம்பிக்கையுடன் பிரம்மனை
வணங்கினால்,
உங்களது
தலையெழுத்து மங்களகரமாக அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. பக்தர்களின்
வருகை அதிகரித்துள்ளதால் தற்போது பூஜைகள் முறையாக நடைபெற வழிவகைகள் ஏற்படுள்ளன.
இந்த
கோவிலில் வேறு சிறப்புகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி இக்கோவில்
பிரகாரத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் இக்கோவில்
வடக்கு பிரகாரத்தில் பாதாள லிங்கம் உள்ளது. பாதாள லிங்கம் ஒரு கோவிலில் இருந்தாலே
அருகில் ஏதோ ஒரு ஜீவசமாதி இருக்கிறது என்பது உட்பொருள். இங்குள்ள காலபைரவர்
இப்பகுதி மக்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியரைப் போல் உதவுகிறார். கிராம
மக்களுக்கு எவ்வித நோய் அறிகுறி தென்பட்டாலும் இக்கோவில் பைரவர் விபூதி அதை
குணப்படுத்துவதாக இப்பகுதி மக்கள் இன்றும் உறுதியாக நம்புகின்றனர்.
இக்கோவில்
பிரம்மபுரீஸ்வரர் பிரதான சிவலிங்கத்தின் மீது ஆண்டிற்கு மூன்று நாட்கள் சூரியனின்
நேரடி கதிர்கள் விழுகின்றன. இதேபோல் மற்றொரு சிறப்பும் உண்டு. சிவலிங்கம் அமைந்துள்ள
கருவறைக்கும் கோவிலின் முகப்பிற்கும் இடையே சுமார் 100 மீட்டர் அதாவது 300 அடி
தூரம் உள்ளது. இடையில் 7 நிலைப்படிகளைக் கடந்து சேரும் வகையில் கோவில்
கட்டப்பட்டுள்ளது. இந்த 7 வாசல்களையும் கடந்து இக்கோவில் கருவறையில் எப்போதும்
இயற்கை வெளிச்சம் காணப்படுவது மிக அரிதான காட்சியாகும். எந்த விளக்கொளியும்
இல்லாமலேயே சிவலிங்கத்தை பளிச்சென தரிசிக்கும் வாய்ப்பு இக்கோவிலில் மட்டுமே உண்டு
என்பது தனிச்சிறப்பு.
பிரார்தனை
: திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில் வியாபாரம், போன்ற அனைத்திற்கும் பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான
பிரார்த்தனை புத்திரபேறு வேண்டுதல், ஏனெனில் பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இந்த ஆலயம் மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான
பிரார்த்தனை ஸ்தலம் ஆகும்.
பேருந்து நேர விவரம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை முதல் இரவு வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அவைகளின் நேர அட்டவணை... 5.15A.M, 6.50A.M, 7.15A.M, 8.15A.M, 10.15A.M, 10.50A.M, 12.15P.M, 2.30P.M, 2.40P.M, 3.00P.M, 5.36P.M, 6.50P.M, 7.15P.M, 7.45P.M, 9.25P.M
மேலும் துறையூரிலிருந்தும் அவ்வப்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை மட்டுமின்றி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரிலிருந்து கால் டாக்சி தொடர்ந்து திருப்பட்டூருக்கு இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment